எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்
|எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக 24-ந் தேதி இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிற அவர், பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குடியரசு தினவிழா
நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950-ம் ஆண்டு, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ந் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது.
இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.
எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினர்
இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது 68) கலந்து கொள்கிறார்.
இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.
இதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் அரசு முறைப்பயணமாக 24-ந் தேதி இந்தியா வருகிறார். அவருக்கு 25-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
பிரதமருடன் இரு தரப்பு பேச்சு
எகிப்து அதிபர் சிசி, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள், உலகளவிலான விஷயங்கள் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துகிறார். மேலும் இந்திய தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியாவும், எகிப்தும் விவசாயம், இணையத்தகவல் ஊடுவெளி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக அரை டஜனுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்.
இரு தலைவர்கள் சந்திப்பின்போது, பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
உறவை வலுப்படுத்தும்
எகிப்து அதிபர் சிசி வருகை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அல் கூறி இருப்பதாவது:-
எகிப்து அதிபர் சிசியுடன் 5 மந்திரிகள், மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் வருகிறது.
அதிபர் சிசி இரு தரப்பு சந்திப்புகள், பிரதமர் மோடியுடன் தூதுக்குழு அளவிலான பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். இரு தரப்பு விஷயங்கள், பிராந்திய விஷயங்கள், பரஸ்பர நலன்களையொட்டிய உலகளாவிய விஷயங்கள், பேச்சுவார்த்தையில் இடம்பிடிக்கும்.
எகிப்து அதிபர் சிசியின் இந்திய வருகை, காலத்தால் சோதிக்கப்பட்ட இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பு வர்த்தகம்
இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான வர்த்தகம், 2021-22 ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 7.26 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.58 ஆயிரத்து 788 கோடி) அளவுக்கு நடந்துள்ளது. எகிப்துக்கு இந்தியா 3.74 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடம் இருந்து எகிப்து 3.52 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் இந்திய தரப்பில் 50 நிறுவனங்கள் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.