< Back
உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு அனுப்புவோம் என கூறி... கடத்தல்காரர்களிடம் சிக்கி தவித்த இந்தியர்கள்
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அனுப்புவோம் என கூறி... கடத்தல்காரர்களிடம் சிக்கி தவித்த இந்தியர்கள்

தினத்தந்தி
|
15 Feb 2024 7:56 AM IST

ஆள்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய, ஏஜெண்டுகளாக செயல்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

காத்மண்டு,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலை தேடி சில ஏஜெண்டுகள் வழியே வெளிநாடுகளுக்கு செல்லும் வழக்கம் கொண்டுள்ளனர். இதற்காக செலவிடும் தொகை குறைவாக இருக்கும் என நம்பி அதனை தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலர் வெளிநாட்டுக்கு சென்று வேலையில் சேருவது என முடிவு செய்துள்ளனர். அவர்கள் சில ஏஜெண்டுகளை சந்தித்து ரூ.45 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். இதன்படி, அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்போம் என்று ஏஜெண்டுகள் கூறியுள்ளனர்.

சட்டவிரோத வகையிலான இந்த பயணத்திற்கு நேபாள நாட்டின் வழியே அவர்கள் அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். ஆனால், ஒரு மாதம் ஆகியும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படாமல் நேபாளத்திலேயே வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றிய ரகசிய தகவல் அறிந்து, காத்மண்டு நகரில் ரதோபுல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த 11 இந்தியர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் அனைவரும் ஆண்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏஜெண்டுகளாக செயல்பட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புகிறோம் என கூறி ஆள்கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்தியர்களை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் பணி மற்றும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. வேறு யாரும் அந்த பகுதியில் இதுபோன்ற ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்