மனித கடத்தல் புகார்: பிரான்சில் 303 இந்தியர்களுடன் தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் புறப்பட அனுமதி
|துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
பாரிஸ்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, விமான நிலையம் வந்த பிரான்ஸ் போலீசார், பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். துபாயில் இருந்து ஒரு விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கராகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்த பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர்.
மனித கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பிரான்ஸ் போலீசார் விமானத்தில் பயணித்த இந்தியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக கோர்ட்டு விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணையில் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதியுடன் பயணித்ததும், மனித கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் விமானம் மீண்டும் புறப்பட பிரான்ஸ் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து 303 இந்தியர்களுடன் விமானம் இன்று பிரான்சில் இருந்து நிக்கராகுவா நாட்டிற்கு புறப்பட உள்ளது.