ரஷியாவில் போருக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்... எங்களை வெளியேற்றுங்கள்: மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்தியர்கள்
|உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்ட இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இவ்வாறு ராணுவத்தில் சேர்க்கப்பட்டடதாக கூறி, இந்தியாவின் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களை உடனடியாக மீட்கும்படி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்த குழுவினர் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளனர். உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக தங்களை ஏமாற்றி ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக அவர்கள் புதிய வீடியோவில் கூறியுள்ளனர். அந்த வீடியோவில் 6 பேர், ராணுவத்தினர் அணியும் குளிர்கால ஜாக்கெட்டுகளுடன் ஹூட்களை அணிந்துள்ளனர். அவர்கள் இருக்கும் இடம் 'சாடோவ், சபோரிஷியா ஒப்லாஸ்ட், உக்ரைன்' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பேசிய நபர், "பிரதமர் மோடி அவர்களுக்கு.. நாங்கள் ரஷிய ராணுவத்திடம் சிக்கியுள்ளோம். இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரி ஏற்கனவே ஒரு வீடியோவை வெளியிட்டோம். மாஸ்கோவில் உள்ள தூதரகத்தையும், இங்குள்ள அரசாங்கத்தையும் தொடர்பு கொண்டு, நாங்கள் விரைவில் இங்கிருந்து வெளியேற உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு இருப்பதையும், நீங்கள் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்" என கூறியுள்ளார்.
அரியானா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த இந்தக் குழுவினரைத் தவிர, வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் செக்யூரிட்டி வேலை அல்லது கூலித்தொழிலாளி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏஜெண்டுகள் மூலம் ரஷியாவுக்கு சென்றதாகவும், அங்கு ராணுவத்தின் முன்களப்பகுதியில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர ரஷியாவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள், போரில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.