இந்தியர், முட்டாள்... சிங்கப்பூரில் இந்திய பெண் என நினைத்து சீன கார் ஓட்டுநர் இனவெறி பேச்சு
|சிங்கப்பூரில், இந்திய பெண் என நினைத்து சீன வாடகை கார் ஓட்டுநர் இனவெறியுடன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் (வயது 46) என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார்.
அவர்கள் செல்லும்போது வழியில், பசீர் ரிஸ் என்ற இடத்தில், மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக சாலை மூடப்பட்டு இருந்தது.
இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர் பின்னால் திரும்பி, காரில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி கத்தி கூச்சலிட்டு உள்ளார். தவறான முகவரியை கொடுத்து, தவறான வழியை காட்டி விட்டாய் என கூறியுள்ளார்.
நீ ஒரு முட்டாள் என சத்தம் போட்டுள்ளார். இதுபற்றி வீடியோ ஒன்றை ஹீடன் எடுத்து வைத்து, அதனை தன்னுடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
அதில், கார் ஓட்டுநர் ஹீடனிடம், உன்னுடைய மகள் உயரம் குறைவாக (1.35 மீட்டருக்கு கீழ்) உள்ளார் என தொடர்ந்து கூறியதுடன், உன்னுடைய மகள் சட்டவிரோதம் ஆனவள் என அழைத்துள்ளார்.
தொடர்ந்து அவர், நீ ஓர் இந்தியர். நான் சீனர். நீ படுமோசம் என கூறியுள்ளார். அதற்கு ஹீடன், நான் சிங்கப்பூர் யுரேசிய பெண். இந்தியர் அல்ல என கூறியுள்ளார். யுரேசியர்கள் இந்தியர்களை போன்று தோற்றமளிக்க கூடியவர்கள்.
அந்த ஓட்டுநர் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதும், அடுத்து உடல் சார்ந்த தாக்குதலை நடத்த கூடும் என்ற அச்சத்தில் நடந்த சம்பவங்களை ஹீடன் வீடியோவாக எடுத்து உள்ளார்.
இதுபற்றி ஹீடன் கூறும்போது, பழுப்பு நிற தோலோ, இந்தியரோ, எப்படியாயினும் அவர் பேசியது ஏற்று கொள்ளத்தக்கதல்ல. அவர் இனவாத அடிப்படையில் பேசியுள்ளார். என்னுடைய மகளும் அதிர்ச்சியடைந்து விட்டார் என கூறியுள்ளார்.
இதுபற்றி சிங்கப்பூரில் உள்ள அந்த ஆன்லைன் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இனவாதம், வேற்றுமை அல்லது தகாத பேச்சுகளோ அவற்றை நாங்கள் சகித்து கொள்வதேயில்லை. இதுபற்றி எங்கள் குழுவினர் விசாரித்து வருகின்றனர். எங்களுடைய கவனத்திற்கு இதனை கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளது.