இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு
|இந்திய மாணவன் மித்குமார் படேலுக்கு ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது.
லண்டன்,
இந்தியாவைச் சேர்ந்த மித்குமார் படேல் (வயது 23) மேற்படிப்புக்காக கடந்த செப்டம்பர் 19ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த மாணவனுக்கு ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. மேலும், அமேசானில் பகுதி நேர வேலையும் கிடைத்திருந்தது. கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மித்குமார் படேல் ஷெபீல்டுக்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி வழக்கம்போல நடைப்பயிற்சிக்காக சென்ற மித்குமார் வீட்டுக்கு திரும்பாத நிலையில் கவலை அடைந்த உறவினர், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து , நவம்பர் 21-ம் தேதி லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் மித்குமார் படேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார், மரணம் சந்தேகத்துக்கு உரியதாக இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து, மித்குமார் படேலின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க அவரது உறவினரான பார்த் படேல், கோ பண்ட் மீ (Go Fund Me) என்ற இணையதளத்தின் மூலம் நிதி உதவி கோரியுள்ளார்.
அதில் மித்குமார் படேல் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "மித்குமார் படேல் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தில் வசித்து வந்தவர். கடந்த நவம்பர் 17, 2023 முதல் அவர் காணாமல் போன நிலையில், நவம்பர் 21-ம் தேதி அவரின் உடல் தேம்ஸ் நதியில் மீட்கப்பட்டது. இது எங்கள் அனைவருக்கும் வருத்தமாக இருந்தது. அவரது குடும்பத்துக்கு உதவுவதற்காக நிதி திரட்டவும் உடலை இந்தியாவிற்கு அனுப்பவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் திரட்டிய சுமார் ரூ.4 லட்சத்திற்கு மேலான உதவி தொகையை மித்குமாரின் குடும்பத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் என பார்த் தெரிவித்தார்.