< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
உலக செய்திகள்

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
30 Jan 2024 3:54 PM IST

பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டிப்பேகானோ கவுண்டியில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் படிப்பை பயின்று வந்துள்ளார் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து அவரது தயார் கவுரி ஆச்சார்யா , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் ,

'எங்கள் மகன் நீல் ஆச்சார்யா கடந்த 28-ம் தேதி முதல் காணவில்லை, அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக தனியார் கால்டாக்சி டிரைவர் ஒருவர் பார்த்துள்ளார். டிரைவர் எனது மகனை பர்டூ பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்டுள்ளார். அதன் பிறகு மகனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்கு உதவவும்'என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் பதில் அளித்து இருந்தது. அதில், 'இந்திய தூதரகம் பர்டூ பல்கலைக்கழக அதிகாரிகளுடனும், நீல் ஆச்சார்யாவின் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருக்கிறோம் . தூதரகம் மூலம் சாத்தியமான அனைத்து உதவியையும் செய்ய தயார் என உறுதியளித்தது.

இந்த நிலையில், டிப்பேகானோ கவுண்டி அதிகாரி தகவலின் படி, கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் இறந்த இளைஞர் உடல் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த தகவல் வந்தவுடன், நேரடியாக சென்று பார்க்கையில், அந்த உடல் பர்டூ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவர் நீல் ஆச்சார்யா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

இதனை கல்லூரி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், எங்கள் மாணவர்களில் ஒருவரான நீல் ஆச்சார்யா காலமானார் என்பதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நீல் ஆச்சார்யா இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

நீல் ஆச்சார்யா எப்படி அங்கு சென்றார், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்