< Back
உலக செய்திகள்
வாடகை தகராறை தடுக்க முயன்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை; சக மாணவர்கள் வெறிச்செயல்
உலக செய்திகள்

வாடகை தகராறை தடுக்க முயன்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை; சக மாணவர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
7 May 2024 6:19 AM IST

இந்திய மாணவரான சந்துவின் தந்தை ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியை விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை சந்துவின் கல்விக்கு செலவிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் எம்.டெக் படித்து வந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இந்தியாவை சேர்ந்தவரான சந்து, வாடகை தகராறில் ஈடுபட்ட இந்திய மாணவர்களை தடுக்க முற்பட்டபோது நடந்த தாக்குதலில் பலியானார்.

இதுபற்றி சந்துவின் மாமா கூறும்போது, சந்துவிடம் கார் இருந்தது. அதனால், வீட்டிலுள்ள தன்னுடைய உடைமைகளை எடுப்பதற்காக சந்துவின் காரில் அவருடைய நண்பர் சென்றிருக்கிறார். அந்த நண்பர் வீட்டின் உள்ளே சென்றதும், வெளியே சிலர் சத்தம் போட்டு, மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சத்தம் கேட்டு சந்து சென்றுள்ளார்.

அப்போது, சக இந்திய மாணவர்கள் வாடகை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனால் சந்து, சண்டை போட்டவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த மாணவர்கள், குறுக்கே வந்த சந்துவை நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்து விட்டார் என வேதனை தெரிவித்து உள்ளார்.

சந்து வருகிற ஜூலையில், குடும்பத்தினரை பார்க்க இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை வருட பணிக்கான விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சந்து சென்றிருக்கிறார். சந்துவின் தந்தை ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியை விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை சந்துவின் கல்விக்கு செலவிட்டு உள்ளார் என அவருடைய மாமா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அபிஜீத் (வயது 26) மற்றும் ராபின் கார்டன் (வயது 27) ஆகிய இருவரையும் விக்டோரியா காவல் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். அவர்கள் கார் ஒன்றை திருடி கொண்டு அதில் தப்பி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அரியானாவின் கர்னால் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்