அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன் மரணம்.. போதைப்பொருள் கும்பல் தீர்த்து கட்டியதா?
|மாணவனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாக கூறி, அவரது தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசியிருக்கிறார்.
இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பாத் (வயது 25). அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்த இவர், கடந்த மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனை தேடி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன மாணவன் முகமது அப்துல் அர்பாத் உயிரிழந்துவிட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று காலையில் தெரிவித்துள்ளது. மாணவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தூதரகம், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருக்கிறது.
மேலும், மாணவனின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் தூதரகம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மாணவன் அர்பாத்தின் தந்தை முகமது சலீம் கூறியதாவது:-
என் மகனிடம் கடைசியாக மார்ச் 7-ம் தேதி பேசினேன். அதன்பின் அவனது செல்போன் சுவிட்ஆப் ஆகிவிட்டது. மார்ச் 19-ம் தேதி அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், என் மகனை போதைப்பொருள் விற்பனை கும்பல் கடத்தி வைத்திருப்பதாகவும், 1,200 டாலர் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறினான்.
ஆனால் பணத்தை எப்படி செலுத்த வேண்டும் என்பதை அந்த நபர் குறிப்பிடவில்லை. எனது மகனை என்னுடன் பேசச் சொல்லுங்கள் என்று கேட்டபோது, அந்த நபர் மறுத்துவிட்டார்.
இவ்வாறு முகமது சலீம் கூறினார்.
எனவே, மாணவன் அர்பாத்தை போதைப்பொருள் விற்பனை கும்பல் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 11 இந்தியர்கள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.