நைஜீரியா பிடித்து வைத்திருந்த இந்திய வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிப்பு
|நைஜீரிய கடற்படை பிடித்து வைத்திருந்த இந்திய கடற்படை வீரர்கள் 9 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அபுஜா,
நைஜீரியா நாட்டில் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக கடந்த ஆண்டு ஹீரோயிக் ஐடுன் என்ற கப்பல் சென்று உள்ளது. அதில், இந்தியாவை சேர்ந்த 16 கடற்படை வீரர்கள் உள்பட 26 வெளிநாட்டினர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், அந்த கப்பல் எண்ணெய்க்காக நைஜீரிய கப்பலுக்கு காத்திருந்தது. எனினும், தெரியாத மற்றும் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று, நைஜீரிய கடற்படையில் இருந்து வருகிறோம் என கூறியபடி இந்த கப்பலை நெருங்கி உள்ளது.
இதனால், கடற்கொள்ளையர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் ஐடுன் கப்பல் சர்வதேச நீர்நிலைகளுக்குள் புகுந்தது. இதனால், ஈகுவேடோரியல் கினியாவின் கடற்படையால் அந்த கப்பல் சிறை பிடிக்கப்பட்டது. பின்னர் நைஜீரிய கடற்படையால் பிடித்து செல்லப்பட்டது.
தொடர்ந்து நடப்பு ஆண்டு ஜனவரியில், நைஜீரிய ஐகோர்ட்டில் இதுபற்றிய வழக்கு விசாரணை நடந்தது. இதில், ஐடுன் கப்பல் மற்றும் அதன் வெளிநாட்டு பயணிகள் 26 பேரும் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டது.
இதன்பின் நைஜீரிய அரசுக்கு இழப்பீடு அளிப்பது என ஒப்பந்தம் போடப்பட்டது. கப்பல் உரிமையாளர்களும் பின்னர், நைஜீரிய அரசிடம் மன்னிப்பு கோரினர். தவறுதலாக, கடற்கொள்ளையர் தாக்குதல் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என வருத்தம் தெரிவிக்கப்பட்டது. நைஜீரிய அரசின் முறையான அனுமதி இன்றி கச்சா எண்ணெய் வாங்கும் முயற்சி நடந்து உள்ளது என தெரிய வந்தது.
இந்நிலையில், அனைத்து ஒப்பந்தங்களையும் நிறைவேற்றிய பின்னர், ஐகோர்ட்டுக்கு திருப்தி ஏற்பட்ட பின்னர், 9 மாதங்களுக்கு பின், இந்திய கடற்படையினர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கடல் சார்ந்த நடவடிக்கைகளில் கவனமுடன் செயல்படும்படி நைஜீரிய கடற்படை எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.