அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன்? - கொரிய மாணவர் வாக்குமூலம்
|அமெரிக்காவில் இந்திய மாணவரை குத்தி கொன்றது ஏன் என்பது குறித்து கொரிய மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் இன்டியானா பர்டூ பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த வருண் மணீஷ் சேடா (வயது 20) என்ற மாணவர் டேட்டா சயின்ஸ் பிரிவில் பயின்று வந்தார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவருடன் கொரியாவை சேர்ந்த மின் ஜிம்மி ஷா என்ற மாணவரும் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் இவர்கள் இருவரும் அறையில் இருந்தபோது மின் ஜிம்மி ஷா திடீரென வருண் மணீஷ் சேடாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவரே போலீசுக்கு போன் செய்து தான் தனது நண்பரை கொலை செய்துவிட்டதாக கூறினார். அதன் பேரில் மின் ஜிம்மி ஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மின் ஜிம்மி ஷா விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, தான் மிரட்டப்பட்டதாக கூறினார். எனினும் அவர் இதுபற்றி விரிவாக எதையும் கூறவில்லை. அதே சமயம் அவர் வருண் மணீஷ் சேடாவின் குடும்பத்தினரிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.