< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை - சக மாணவர் கைது
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை - சக மாணவர் கைது

தினத்தந்தி
|
6 Oct 2022 11:07 PM IST

இந்திய வம்சாவளி மாணவர் படுகொலை செய்த வழக்கில் தென்கொரியாவை சேர்ந்த சக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இந்தியனாபோலிஸ் நகரத்தைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி மாணவர் வருண் மணிஷ் சேடா (வயது 20). இவர் பர்டூ பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல் படிப்பு படித்து வந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தின் மேற்கு முனையில் உள்ள மேக்கட்சான் அரங்கில் உள்ள அறையில் அவர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது அறையில் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் கூர்மையான காயங்கள் இருந்தன. இந்தக்கொலையில் அவருடன் தங்கி இருந்த தென்கொரியாவை சேர்ந்த சக மாணவர் ஜி மின் ஜிம்மி ஷா (22) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படுகொலை குறித்து வருண் மணிஷ் சேடாவின் பால்ய கால நண்பர் அருணாப் சின்கா கூறுகையில், "சேடா சம்பவத்தன்று இரவில் தனது நண்பர்களுடன் ஆன்லைனில் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டது. என்ன நடந்தது என தெரியவில்லை. காலையில் எழுந்தால் சேடாவின் மரண செய்திதான் கிடைத்தது" என தெரிவித்தார். இந்த கொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்