< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்.. அமெரிக்காவில் தமிழக மாணவி கைது
உலக செய்திகள்

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்.. அமெரிக்காவில் தமிழக மாணவி கைது

தினத்தந்தி
|
26 April 2024 11:30 AM IST

அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம்தேதி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் வலிமையான நட்பு நாடான அமெரிக்காவில், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்களின் நீட்சியாக, பிரபலமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாக, போராட்டம் தொடங்கிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சையத் என்ற மாணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக விதிகளை மீறி, நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அமைத்தனர். அதில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தயாராகினர். இதையடுத்து அச்சிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சையத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும்வரை இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மோரில் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டபின்னரும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. எனினும், மற்ற போராட்டக்காரர்கள் தாமாகவே முன்வந்து தங்களுடைய கூடாரம் அமைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றனர். பிரின்ஸ்டன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் வெளியாட்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் தமிழகத்தில் பிறந்தவர் ஆவார். அவர் சர்வதேச வளர்ச்சியில் பொது விவகாரங்கள் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சையத் பிஎச்.டி. படித்து வந்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். யூத எதிர்ப்பு கும்பல் முன்னணி பல்கலைக்கழகங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்