இந்திய வம்சாவளி மந்திரி நாட்டை விட்டு வெளியேற தடை - சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
|ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் இந்திய வம்சாவளி மந்திரி நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங்கின் மந்திரி சபையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன். இவர் மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் 2025-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் செயல்திறனை பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்புக்கு பிரதமர் லீ ஒப்புதல் வழங்கினார். மேலும் இந்த விசாரணை முடியும் வரை விடுப்பு எடுக்குமாறு மந்திரி ஈஸ்வரனை பிரதமர் அறிவுறுத்தினார். அதன்படி மந்திரி ஈஸ்வரன் தற்போது கட்டாய விடுப்பில் உள்ளார்.
இந்த நிலையில் ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் விடுப்பில் இருக்கும் மந்திரி ஈஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று பிரதமர் லீ உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் விசாரணை முடிவடையும் வரை மந்திரி ஈஸ்வரன் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசின் பிற வளங்களை பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.