கைது செய்ய முயன்றபோது தாக்குதல்.. அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
|தாக்குதல் வழக்கில் தொடர்புடைய சச்சின் சாஹூவை கைது செய்ய சென்றபோது போலீஸ் அதிகாரிகள் மீது சாஹூ தனது காரை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரின் சேவியட் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் சச்சின் சாஹூ (வயது 42). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 21-ம் தேதி தன்னுடன் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். அவர் மீது தனது காரை ஏற்றியுள்ளார். இதில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் சாஹூவை தேடி வந்தனர்.
இதற்கிடையே தப்பிச் சென்ற சச்சின் சாஹூ, சில மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து சச்சின் சாஹூவை கைது செய்ய முயன்றனர். அப்போது, நடந்த களேபரத்தில் அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இதுபற்றி சான் அன்டோனியோ காவல்துறை கூறியிருப்பதாவது:-
தாக்குதல் வழக்கில் தொடர்புடைய சச்சின் சாஹூவை கைது செய்வதற்காக வீட்டுக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள், அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். அப்போது இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது சாஹூ தனது காரை மோதி உள்ளார். அப்போது, மற்றொரு அதிகாரி தனது துப்பாக்கியால் சாஹூவை நோக்கி சுட்டார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார்.
குற்றவாளி காரை ஏற்றியதில் இரண்டு அதிகாரிகளும் காயமடைந்தனர். ஒரு அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றொரு அதிகாரிக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
சாஹூ ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்ததாக உள்ளூர் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட சச்சின் சாஹூ, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றிருக்கலாம் என தெரிகிறது.