< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை
உலக செய்திகள்

அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை

தினத்தந்தி
|
10 Feb 2024 11:19 AM IST

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ஜார்ஜியாவின் லிதோனியா நகரில் மற்றொரு மாணவர் விவேக் சைனியை போதை ஆசாமி ஒருவர் கொடூரமாக தாக்கினார். இந்த ஆண்டில் 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 41 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி நிர்வாகி விவேக் தனேஜா, வாஷிங்டனில் மர்ம நபரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டைனமோ டெக்னாலஜிஸ் இணை நிறுவனரான தனேஜாவுக்கும், அந்த நபருக்கும் இடையே கடந்த 2-ம் தேதி 15வது தெருவின் 1100வது பிளாக்கில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர் தனேஜாவை கடுமையாக தாக்கி கீழே தள்ளியிருக்கிறார். இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் கொடுத்தால் அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்