அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளுடன் பிணமாக கிடந்த இந்திய என்ஜினீயர்
|அமெரிக்காவில் மனைவி, குழந்தைகளுடன் இந்திய என்ஜினீயர் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
நியூயார்க்,
உத்தரபிரதேசம் ஜலான் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் தேஜ் பிரதாப் சிங் (வயது 43) அமெரிக்காவில 2009-ம் ஆண்டில் இருந்து சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். தேஜ் பிரதாப் சிங் நியூஜெர்சி பின்ஸ்போரோ பகுதியில் மனைவி சோனல் பரிகார் (42). மகன் ஆயுஷ் (10) மகள் ஆரி (6) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக தேஜ் பிரதாப் சிங் வீடு பூட்டிக்கிடந்தது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வீட்டில் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நியூஜெர்சி நகர போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டை திறந்து பார்த்தனர்.
அங்கு வீட்டின் படுக்கையறையில் தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி சோனல், மகன் ஆயுஷ் மற்றும் மகள் ஆரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். உடனடியாக போலீசார் அவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.