இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகல்
|ஒரு தவறு செய்து விட்டேன் என கூறி இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென்.
இந்த நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றிய தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார். கடந்த 14-ந்தேதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது.
இந்த சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதனால், இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சின் அரசில் உள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் புலம்பெயர்வோரை குறைக்கும் தங்களது நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும் பிரேவர்மேன் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வேலை தேடி செல்வது பாதிக்கப்பட கூடிய சூழலும் ஏற்பட்டது.
இதேபோன்று, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டு சமீபத்தில் அவர் பேசும்போது, விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் எதிர்வினையாற்றியது.
இந்நிலையில், பிரேவர்மேன் அப்படியே பல்டி அடித்து, இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய வம்சாவளி மக்களாலேயே இங்கிலாந்தின் வளம் பெருகியுள்ளது.
இந்திய சமூக உறுப்பினராக நான் இருப்பது பெருமைக்குரிய விசயம். இங்கிலாந்தின் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை, தங்கியுள்ள இந்தியர்கள் நாட்டை அலங்கரித்து உள்ளனர்.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியா, இங்கிலாந்து இடையேயான நட்புறவை மேலும் ஆழப்படுத்த மற்றும் இரு நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் செயல்படும் என கூறினார். இந்த சூழலில் அமைச்சரவையில் இருந்து பதவி விலகும் முடிவை அவர் அறிவித்து உள்ளார்.