பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற இந்திய வம்சாவளி ஆஸ்திரேலிய எம்.பி.
|பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை வருண் கோஷ் பெற்றுள்ளார்.
சிட்னி,
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வருண் கோஷ். இவர் தனது 17-வது வயதில் பெற்றோருடன் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறினார். அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த வருண் கோஷ், பின்னர் ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார்.
இந்த நிலையில் வருண் கோஷை நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வருண் கோஷ், இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
இதன் மூலம் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை வருண் கோஷ் பெற்றுள்ளார். புதிய எம்.பி.யாக பதவியேற்றுள்ள வருண் கோஷிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் சக எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.