ஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ
|ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. 3 மாலுமிகள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர். ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை, 'ஐ.என்.எஸ். கொல்கத்தா' போர்க்கப்பலில் சென்ற இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு கப்பலில் உள்ள மருத்துவ குழுவினர் முதற்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிபோட்டி நாட்டிற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்பு தொடர்பான வீடியோவை கடற்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு, நடந்த சம்பவம் குறித்து விளக்கி உள்ளார்.
ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் கடல்சார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.