< Back
உலக செய்திகள்
17 பேருடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
உலக செய்திகள்

17 பேருடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை

தினத்தந்தி
|
29 Jan 2024 4:07 PM IST

17 ஈரானியர்களுடன் சென்ற மீன்பிடி கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

தெஹ்ரான்,

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரானை சேர்ந்த 17 பேர் மீன்பிடி கப்பலில் கிழக்கு சோமாலியாவின் கடற்பகுதி, ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் மீன்பிடி கப்பலை சிறைபிடித்தனர். மேலும், கப்பலில் இருந்த 17 பேரையும் பணய கைதிகளாக பிடித்தனர்.

இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்த அனைவரும் உதவிகேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு அழைப்பு விடுத்தனர். உதவிகேட்டு அவரச அழைப்பு வந்த உடன் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்றது.

மேலும், கடத்தல் கப்பலை விட்டு உடனடியாக வெளியேறும்படி, கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை கப்பல் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து பணய கைதிகளை விடுதலை செய்த கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட ஈரான் கப்பலில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்