உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
|உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பாலா,
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள கிஷோரோ நகரில் வசித்து வந்த இந்தியர் குந்தாஜ் படேல். 24 வயதான இவர் அதே நகரில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி குந்தாஜ் படேல் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார். கடையில் அவரும், ஊழியர் ஒருவரும் இருந்தனர்.
அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது எலியோடா குமிசாமு என்கிற 21 வயது போலீஸ்காரர் ஒருவர் குந்தாஜ் படேலின் கடைக்குள் வேகமாக நுழைந்தார்.
பின்னர் அவர் தனது துப்பாக்கியை எடுத்து குந்தாஜ் படேலை சரமாரியாக சுட்டார். இதில் அவரது மார்பில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து அந்த போலீஸ்காரர் அங்கிருந்து தப்பி ஓடினார். எனினும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த குந்தாஜ் படேலை கடையின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலைக்கான பின்னணி என்பது தெரியாத நிலையில், கைது செய்யப்பட்ட போலீஸ்காரரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கென்யாவில் சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 2 இந்தியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடத்தல்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.