நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு நிவாரண உதவிகள் - இந்திய ராணுவம் வழங்கியது
|இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது.
டமாஸ்கஸ்,
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி ரிக்டர் 7.8 என்ற அளவில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது. இதில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்ற கொள்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.