அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி
|அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்திய தூதரகம் மீது தாக்குதல்
பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை இறக்கி அவமதித்தனர்.
அதனைத்தொடர்ந்து, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி
இந்த நிலையில் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான இந்திய-அமெரிக்கர்கள் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் நோக்கி அமைதி பேரணி சென்றனர்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் கொடிகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்ற இந்திய-அமெரிக்கர்கள் இந்திய தூதரகத்தின் முன்பு திரண்டு இந்தியாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பிரிவினைவாத சிக்கியர்கள் சிலர் காலிஸ்தான் சார்பு முழக்கங்களை எழுப்பினர். எனினும் அவர்களை விட எண்ணிக்கையில் இந்திய-அமெரிக்கர்கள் தேசியக்கொடியை அசைத்தபடி 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என முழங்கி பிரிவினைவாத சிக்கியர்களை வாயடைக்க செய்தனர்.