நிலையான அரசு அமைந்த பின் இலங்கைக்கு இந்தியா உதவி செய்யும்; முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா
|இலங்கையில் நிலையான அரசு அமைந்த பின், சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் அனைத்து நட்பு நாடுகளும் உதவி செய்யும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இன்று கூறியுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்.
கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தியும், உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர். இது தொடர்புடைய வீடியோக்களும் வெளிவந்தன.
இதனிடையே, போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ரனில் விக்ரமசிங்கே நேற்று ராஜினாமா செய்தார். மேலும், 2 மந்திரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே வரும் 13ந்தேதி ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா நேற்று கூறினார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்பே அறிவித்தது போன்று அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் தெரிவித்து உள்ளார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.
இதன்படி, கோத்தபய ராஜபக்சே வருகிற 13ந்தேதி அதிபர் பதவியில் இருந்து விலகுகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவது பற்றி பிரதமர் ஊடக பிரிவு கூறும்போது, சர்வ கட்சி அரசு அமைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற பின்பு விக்ரமசிங்கே பதவி விலகுவார் என தெரிவித்தது. அதுவரை விக்ரமசிங்கே பிரதமராக நீடித்திடுவார் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சனத் ஜெயசூர்யா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஒவ்வொருவரும் வன்முறையற்ற போராட்டம் நடத்தப்பட வேண்டும் என விரும்பினர். அதிபர் பதவி விலக வேண்டும் என்பது உறுதி செய்யப்படுவதற்காக நாங்கள் அதனையே செய்தோம்.
முதல் நாளில் இருந்து, போராட்டக்காரர்கள் பக்கமே நான் இருந்தேன். தற்போது சபாநாயகர், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சி தலைவர்கள் விரைவான முடிவை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கையில் நிலையான அரசு அமைந்த பின்பு, சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் அனைத்து நட்பு நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்யும். இலங்கையில் நெருக்கடி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, இந்தியா உதவியாக இருந்து வந்துள்ளது.
நிவாரண பொருட்களையும் வழங்கி உதவி செய்துள்ளது. அதற்காக நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இலங்கைக்காக இந்தியா ஒரு பெரும் பங்காற்றி உள்ளது என அவர் கூறியுள்ளார்.