< Back
உலக செய்திகள்
இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
உலக செய்திகள்

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
23 Aug 2023 5:47 AM IST

தென்ஆப்பிரிக்காவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' அமைப்பை நடத்தி வருகின்றன.

15-வது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு, தென்ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள சான்டன் சன் ஓட்டலில் நேற்று ெதாடங்கியது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்த இம்மாநாடு, தற்போது நேரடி நிகழ்வாக நடக்கிறது.

இதில் பங்கேற்குமாறு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதை ஏற்று, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். நாளை (வியாழக்கிழமை) வரை மாநாடு நடக்கிறது.

1,200 பிரதிநிதிகள்

பிரதமர் மோடியுடன், 'பிரிக்ஸ்' அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

10-க்கும் மேற்பட்ட இதர நாடுகளின் பிரதிநிநிதிகள், பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ஆகியோருக்கும் தென்ஆப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி இப்ராகிம் படேல், மாநாட்டை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக, வர்த்தக உரையாடல் நடந்தது.

5 பிரிக்ஸ் நாடுகள் மற்றும் இதர நாடுகளை சேர்ந்த சுமார் 1,200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மோடிக்கு வரவேற்பு

பிரதமர் மோடி, நேற்று மாலை தென்ஆப்பிரிக்கா போய்ச் சேர்ந்தார். அங்குள்ள வாட்டர்லூப் விமானப்படை தளத்தில் அவரை தென்ஆப்பிரிக்க துணை அதிபர் பால் மசாட்டிலே வரவேற்றார்.

மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரிட்டோரியா இந்து சேவா சமாஜ், சுவாமிநாராயணன் அமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான இந்திய வம்சாவளியினரும் பிரதமரை வரவேற்றனர்.

அங்கிருந்து மாநாடு நடக்கும் ஓட்டலுக்கு பிரதமர் மோடி சென்றார். ஓட்டல் வாசலில், இசை கருவிகளை இசைத்து இந்திய வம்சாவளியினர் மோடியை வரவேற்றனர்.

பொது நாணயம்

மாநாட்டின் முக்கிய நிகழ்வான தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளிடையே வர்த்தகம் மேற்கொள்வது, அமெரிக்க டாலரை சார்ந்திருக்காமல், பொது நாணயம் அறிமுகப்படுத்துவது ஆகியவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

அத்துடன், 'பிரிக்ஸ்' அமைப்பை விரிவுபடுத்துவது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. அதில் சேர 20-க்கு மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

ஜின்பிங்கை சந்திப்பாரா?

மாநாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு வரும் பிற நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனால், சீன அதிபர் ஜின்பிங்கை சந்திப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.

பிரிக்ஸ் மாநாடு மட்டுமின்றி, அந்த அமைப்பில் இடம்பெறாத நாடுகள் பங்கேற்கும் 'பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா அவுட்ரீச்' மற்றும் 'பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்' ஆகிய நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

எதிர்கால ஒத்துழைப்பு

முன்னதாக, தென்ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒட்டுமொத்த தெற்குலக நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு உகந்த தளமாக 'பிரிக்ஸ்' அமைப்பை நாம் மதிக்கிறோம். வலிமையான ஒத்துழைப்பு செயல்திட்டத்தை 'பிரிக்ஸ்' அமைப்பு பின்பற்றி வருகிறது.

மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் உரையாட ஆர்வமாக இருக்கிறேன். சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் ஆர்வமாக இருக்கிறேன்.

எதிர்காலத்தில் எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது என்பதை அடையாளம் காண பிரிக்ஸ் அமைப்பு, பயனுள்ள வாய்ப்பை அளிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இதே தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

இந்நிலையில் இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதுதொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய அவர், "உலகப் பொருளாதார சூழ்நிலையில் கொத்திப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா, தொற்றுநோயை பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்வதற்கான வாய்ப்பாக மாற்றியதே இதற்குக் காரணம். நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மூலம், இந்தியாவில் எளிதாக வணிகம் மேம்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை கொண்டுவந்ததன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளோம். தொழில்நுட்பத்தின் உதவியுடன், நிதி உள்ளடக்கிய துறையில் இந்தியா முன்னேறியுள்ளது.

கிராமப்புற பெண்களே அதிக பயனாளிகளாக உள்ளனர். ஒரே கிளிக்கில், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரடி பரிமாற்ற பலன் மூலம் பயனடைகின்றனர். யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தம் 360 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும்" என்று அவர் கூறினார்.

கிரீஸ் பயணம்

பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக்கொண்டு, 25-ந் தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகருக்கு செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பின்பேரில் அங்கு செல்கிறார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம், மக்களிடையிலான தொடர்புகள் ஆகியவற்றில் நிலவும் ஒத்துழைப்பு, இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வந்துள்ளதாக பிரதமர் மோடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கைது அச்சத்தால் புதின் வரவில்லை

'பிரிக்ஸ்' அமைப்பில் ரஷியாவும் இடம்பெற்றுள்ளது. 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில், மற்ற 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட போதிலும், ரஷிய அதிபர் புதின் நேரடியாக பங்கேற்கவில்லை. அவர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

உக்ரைன் குழந்தைகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் கோர்ட்டு, கடந்த மார்ச் மாதம் கைது வாரண்டு பிறப்பித்தது. புதின் வெளிநாடு சென்றால், கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

எனவே, கைதாவதை தவிர்க்க, புதின் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை. ரஷியா சார்பில் அதன் வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் தலைமையிலான குழு கலந்து கொண்டது.

மேலும் செய்திகள்