வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு இந்தியா கடும் கண்டனம்!
|ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா சார்பில் அமெரிக்க தூதர் கூட்டறிக்கை வெளியிட்டார்.
நியூயார்க்,
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1 ஆம் தேதி (சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.
இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியுள்ளது. இது இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏவுகணை பறந்த நேரத்தில் வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.வட கொரியா கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ஏவுகணையை ஏவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இந்தியாவும் கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் நேற்று பேசுகையில், இந்த ஏவுதல்கள் அந்த பிராந்தியத்திலும் வெளிஉலகிலும் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.
முன்னதாக,செவ்வாய்க்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, அல்பேனியா, பிரேசில், பிரான்ஸ், இந்தியா, அயர்லாந்து, ஜப்பான், நார்வே, தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்பீல்ட் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வடகொரியா இன்று அதிகாலை அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.