மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளும் இந்தியா - ஐ.நா. தகவல்
|உலக மக்கள் தொகையில் இந்தாண்டு மத்தியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வரும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
நியூயார்க்,
உலக மக்கள் தொகை நிலை - 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ''மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மக்கள் தொகை பெருக்கம் சார்ந்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற ஐநா அதிகாரிகள், ''மக்கள் தொகையில் இந்தியா, இந்த மாதம் சீனாவை பின்னுக்குத் தள்ளும். எனினும், இந்த மாதத்தில் அது என்று நிகழும் என துல்லியமாகக் கூற முடியாது. ஏனெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011-ம் ஆண்டு எடுத்தது. அதன்பிறகு 2021-ல் எடுத்திருக்க வேண்டும்.
கொரோனா காரணமாக அது தாமதமாகி வருகிறது. மக்கள் தொகை சார்ந்து இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் பழையதாக இருப்பதால், இந்தியா எந்த நாளில் சீனாவை பின்னுக்குத்தள்ளும் என்பதை துல்லியமாகக் கணிக்க இயலாது.
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும். இருந்த போதிலும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் தொடங்கியது. இனி, இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன மக்கள் தொகை சரிவு அதன் பொருளாதாரத்திலும், உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்தது' என தெரிவித்துள்ளனர்.