இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு போர்ப்பயிற்சி: கொழும்புவில் தொடங்கியது
|கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது.
கொழும்பு,
இந்திய, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் இந்த ஆண்டும், இவ்விரு நாடுகளின் கடற்படைகளின் 10-வது கூட்டு போர்ப்பயிற்சி கொழும்புவில் 3-ந் தேதி தொடங்கியது.
இந்த கூட்டு போர்ப்பயிற்சி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 5-ந் தேதி வரையில் துறைமுக அளவிலான கூட்டு போர்ப்பயிற்சி கொழும்புவில் நடக்கிறது.
6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையில் கடல் அளவிலான கூட்டு போர்ப்பயிற்சியும் கொழும்புவில் நடக்கிறது.
இந்திய, இலங்கை கப்பல்கள்
இந்த கூட்டு போர்ப்பயிற்சியில் இந்தியாவில் இருந்து அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கில்தான், ரோந்து கப்பலான ஐ.என்.எஸ். சாவித்திரி, இந்திய கடற்படையின் சேட்டக் ஹெலிகாப்டர், டோர்னியர் கடல்சார்பு ரோந்து விமானம் ஆகியவை பங்கேற்றுள்ளன.
இலங்கை தரப்பில் அதிநவீன ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ். கஜபாகு, எஸ்.எல்.என்.எஸ். சாகரா போர்க்கப்பல், இலங்கை விமானப்படையின் டோர்னியர், பெல் 412 ஹெலிகாப்டர்களும் பங்கேற்றுள்ளன.
முக்கிய பயிற்சிகள்
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான கூட்டு போர்ப்பயிற்சியின்போது, வான் எதிர்ப்பு சூப்பாக்கி சூடு, கடல்சார் மதிப்பீடுகள், ஹெலிகாப்டர் மற்றும் கடல் ரோந்து விமான நடவடிக்கைகள், குறுக்கு தளத்தில் பறத்தல், மேம்பட்ட தந்திரோபாய சூழ்ச்சிகள், தேடல் மற்றும் மீட்பு, கடலில் சிறப்பு படை நடவடிக்கைகள் போன்ற பல பரிமாணங்களில் கூட்டு போர்ப்பயிற்சிகள் இடம் பெறுகின்றன.