< Back
உலக செய்திகள்
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் - ஈரான் அதிபர் ரைசி நம்பிக்கை
உலக செய்திகள்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் - ஈரான் அதிபர் ரைசி நம்பிக்கை

தினத்தந்தி
|
7 Nov 2023 2:54 AM IST

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.

தெஹ்ரான்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 32 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய ஆசியாவில் நிலவும் கடினமான சூழல் குறித்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், இந்திய-ஈரான் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

மேலும் மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டங்களையும், உலகில் அணிசேரா இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக நாட்டின் நிலைப்பாட்டையும் ரைசி நினைவு கூர்ந்தார்.

உடனடி போர் நிறுத்தம், தடையை நீக்குதல் மற்றும் காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகளை தெஹ்ரான் ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்களைக் கொல்வது தொடர்வது உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் இந்த போர் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒடுக்கப்பட்ட மற்றும் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு மனிதனின் பார்வையில் இருந்தும் "கண்டனத்துக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார்.

முன்னதாக ஈரான் அதிபருடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்தும், அதனால் மேற்கு ஆசியாவில் நிலவும் கடினமான சூழ்நிலை குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறி கொண்டோம். பயங்கரவாத சம்பவங்கள், வன்முறைகள் மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்புகள் ஆகியவை தீவிர கவலைக்குரியவை.

போர் தீவிரமடைவதை தடுப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினோம். சபாஹார் துறைமுகம் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்றோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்