< Back
உலக செய்திகள்
ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
உலக செய்திகள்

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

தினத்தந்தி
|
23 Sept 2023 10:21 PM IST

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

காஷ்மீர் விவகாரம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முன்தினம் இந்த கூட்டத்தொடரில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் காக்கர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, "இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிக்கு காஷ்மீர் விவகாரமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான மற்றும் ஆக்கபூர்வ உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது" என கூறினார்.

இந்தியா பதிலடி

இந்த நிலையில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமரின் இந்த பேச்சுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவின் முதன்மை செயலாளர் பெடல் காலோட் ஐ.நா. சபையில் பேசியதாவது:-

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் தாயகமாகவும், ஆதரவாளராகவும் பாகிஸ்தான் இருந்து வருகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகும் நீதிக்காக காத்திருக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகளுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மூன்றடுக்கு நடவடிக்கை

தெற்காசியாவில் அமைதி நிலவ பாகிஸ்தான் மூன்றடுக்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

முதலாவதாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவதோடு, நாட்டில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை உடனடியாக மூடவேண்டும்.

இரண்டாவதாக, இந்தியாவின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும். சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

மூன்றாவதாக, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை

உலகின் மிக மோசமான மனித உரிமைகள் குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் நசுக்கப்படும் நாடாக இருக்கும் பாகிஸ்தான் உலகை நோக்கி விரலை நீட்டும் முன் தனது சொந்த நாட்டை ஒழுங்குபடுத்துவது நல்லது. தனது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே பாகிஸ்தான் தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். எனவே இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு கருத்துக்கூற பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

மேலும் செய்திகள்