இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
|ரஷியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சனா,
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சண்டை நடைபெற்று வருகிறது. ஆறு மாதங்களுக்கும் மேலாகியும் இந்த போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக நிற்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஆதரவான கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால், செங்கடல் பகுதியில் கடந்த சில மாதங்களாக வணிக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், செங்கடலில் உள்ள ஆண்ட்ரோமெடா ஸ்டார் என்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா கொடியுடன் வந்து கொண்டிருந்த இந்த கப்பல் பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமானது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார். இந்த டேங்கர் கப்பல் இப்போது ரஷியாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. ரஷியாவின் ப்ரிமோர்ஸ்கில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வாடினாருக்கு வந்து கொண்டிருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இது செலவை அதிகரிப்பதால் சர்வதேச வணிக போக்குவரத்து இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.