ரஷியாவுடனான உறவில் விரிசல் - இஸ்ரோவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!
|ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இந்தியாவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.
லண்டன்,
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இஎஸ்ஏ) தனது விண்வெளி பணிகளைத் தொடங்க புதிய கூட்டணிகளை தேட ஆரம்பித்துள்ளது.
உக்ரைன் போர் தொடர்பான உறவுகளில் ஏற்பட்ட முறிவைத் தொடர்ந்து ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அதன் ஐரோப்பிய விண்வெளி உறவுகளை முடித்துக்கொண்டது. மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதார நடவடிக்கைகளால் ரஷியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன்காரணமாக, ரஷியாவுடனான செவ்வாய் கிரக கூட்டுத் திட்டம் உட்பட பல பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷியாவின் விண்கலமான சோயுஸ் விண்கலத்தை சார்ந்து இருக்க முடியாத சூழலில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இந்தியாவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது.
மேலும் இந்தியாவையும் சேர்த்து, அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜப்பானுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐரோப்பிய விண்வெளி நிறுவன(இஎஸ்ஏ) பொதுஇயக்குனர் ஜோசப் அஷ்பேச்சர் தெரிவித்தார்.
இந்தியாவின் பிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுகலன்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.