அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை பட்டியல்; அமெரிக்காவில் புலனாய்வு பிரிவு பத்திரிகையாளர் கத்தியால் குத்தி கொலை
|அமெரிக்காவில் புலனாய்வு பிரிவு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு வீட்டில் உயிரிழந்து கிடந்து உள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ஜெப் ஜெர்மன் (வயது 69). புலனாய்வு செய்திகளை எழுதுவதில் திறன் படைத்தவரான இவர் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்து உள்ளார்.
இதனை கவனித்த அருகே வசித்த மற்றொரு நபர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி லாஸ் வேகாஸ் காவல் துறையை சேர்ந்த உயரதிகாரி தோரி கோரென் கூறும்போது, ஜெர்மனுக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே, மோதல் ஏற்பட்டு அவர் கொல்லப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார்.
தரமுள்ள செய்திகளை தருவதில் சிறந்தவர் என ஜெர்மனுக்கு உயரதிகாரியாக உள்ள கிளென் குக் கூறியுள்ளார். தனது பாதுகாப்புக்கு ஆபத்து என்ற எந்தவொரு தகவலையும் ஜெர்மன், செய்தி நிறுவன தலைமையிடம் தெரிவிக்கவில்லை என்றும் குக் கூறியுள்ளார்.
சி.பி.சி. நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பத்திரிகையாளர்கள் பலர் இந்த ஆண்டில் படுகொலை செய்யப்பட்டு உள்ள விவரம் வெளிவந்து உள்ளது. இதற்கு முன் மெக்சிகோவில், எல்லைப்புற நகரான சான் லூயிஸ் ரியோ கொலராடோவின் ஒரு பகுதியில் ஜுவான் அர்ஜோன் லோபஸ் என்ற பத்திரிகையாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கடும் தாக்குதலில், காயமடைந்து உயிரிழந்து உள்ளார்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் மத்திய மெக்சிகோவில் மதுபான பார் ஒன்றில் எர்னெஸ்டோ மெண்டிஸ் என்ற பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த ஜூனில், ஆன்டனியோ டி லா குரூஸ் என்ற பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டார்.
கடந்த மே மாதத்தில், கடலோர நகரான வெராகுரூஸ் நகரில் செய்தி சேகரிப்பு இடத்தில் வைத்து 2 பத்திரிகையாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதத்தில் ஜிட்டாகுவாரோ பகுதியில் நிருபர் ஆர்மேண்டோ லினாரெஸ் என்பவர் சுடப்பட்டு உயிரிழந்து உள்ளார். இதேபோன்று, மார்ச் தொடக்கத்தில் ஜுவான் கார்லோஸ் முனிஜ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சுட்டு கொன்றனர். அவர் குற்ற சம்பவங்களை பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹெர் லோஸ் என்ற ஆன்லைன் பத்திரிகையின் இயக்குனர் ஒருவர், ஓக்சாகா நகரில் வைத்து மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.