வரும் 2025ம் ஆண்டில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி ரூ.29,496.66 கோடியாக உயரும்; அறிக்கை தகவல்
|சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் ரூ.29 ஆயிரத்து 496 கோடியாக உயரும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
நியூயார்க்,
உலகில் பாலியல் சார்ந்த வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் ரூ.29 ஆயிரத்து 496 கோடியாக உயரும் என அறிக்கையை வெளியிட்டு உள்ள டெக்னோவியோ என்ற சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த வளர்ச்சியானது, ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இவற்றில், ஆசிய பசிபிக் பகுதிகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் 44 சதவீத வளர்ச்சி இருக்கும்.
இவற்றுக்கு, பாலியல் சார்ந்த வியாதிகள் பற்றி மக்களிடையே காணப்படும் அதிகப்படியான விழிப்புணர்வு மற்றும் பரவலாக, பல பிராண்டுகளில் ஆணுறைகள் கிடைப்பது ஆகியவை வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
முதன்மையாக, நவீன தொழில் நுட்பத்துடன், வடிவம், அளவு மற்றும் வண்ணம் ஆகியவற்றில் புதுமை விசயங்கள் சேர்க்கப்பட்டு சர்வதேச ஆணுறை சந்தையானது மெல்ல, மக்கள் அதிக அளவில் அவற்றை வாங்குவதற்கான, முக்கியத்துவம் பெரும் ஒன்றாக மாறி வருகிறது.
சர்வதேச அளவிலான சந்தை போட்டியுடன், ஆணுறை உற்பத்தி பொருள் மற்றும் வடிவங்கள் விரைவான பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் அவற்றை விரைவாக வினியோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
ரகசியமுடன் இதுபோன்ற பொருட்களை ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற பேக்கிங் வடிவங்களும் வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகரியங்களை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. வளர்ந்து வரும் இ-வர்த்தக தளங்களும் இந்த தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.