ஈரானுக்கு எதிரான பதிலடியில்... இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுக உதவி
|ஈரானுக்கு எதிரான பதிலடியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க விமானம் ஒன்று, ஈரானின் 70-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
வாஷிங்டன்,
போரால் பல ஆண்டுகளாக பாதிப்படைந்த சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று உள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்க அரசு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் என்பதற்காக ஈரான் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டது.
இதன்படி, அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியது. ஈரான் அதிபரின் அரசியல் விவகாரத்திற்கான பணியாளர் துணை தலைவர் முகமது ஜம்ஷிதி எழுதிய அந்த கடிதத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலையில் சிக்க வேண்டாம். அதில் இருந்து, அமெரிக்கா விலகி இருக்க வேண்டும். அதனால், நீங்கள் தாக்குதலில் இருந்து தப்புவீர்கள் என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஈரானிடம் அமெரிக்க அரசு கேட்டு கொண்டுள்ளது என்றும் ஜம்ஷிதி கூறினார். எனினும், ஈரான் அனுப்பிய தகவல் பற்றி அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்கிறேன் என நேற்று முன்தினம் கூறினார். இந்த தருணத்தில் ஈரானுக்கான தன்னுடைய செய்தி, போர் வேண்டாம் என்றும் கூறினார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்றும் அப்போது கூறினார்.
இதனை முன்னிட்டு, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும், இஸ்ரேல் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கான புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அந்நாட்டிலுள்ள தங்களுடைய குடிமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கையும் விடுத்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதலை தொடுத்தது. ஈரான் நாடு நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுதவிர்த்து, 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும், இதனை அமெரிக்க ராணுவம் முறியடித்தது என அந்நாட்டின் உயரதிகாரி கூறியுள்ளார். தாக்குதலை தடுக்கும் வகையில், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆர்லே புரூக் மற்றும் யு.எஸ்.எஸ். கார்னி ஆகிய இரு போர்க்கப்பல்களை கொண்டு, 4 முதல் 6 வரையிலான பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீழ்த்தி அமெரிக்கா பதிலடி கொடுத்தது.
அமெரிக்க விமானம் ஒன்று, ஈரானின் 70-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஒன்றை அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தாக்குதலின் ஒரு பகுதியாக நாங்கள் இருக்கவில்லை என கூறினார். எனினும், பின்விளைவுகள் என்னவென்று நன்றாக எங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோன்று, ஈரானுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சுவிஸ் சேனல் வழியே நாங்கள் தொடர்ச்சியாக நேரடி தொடர்பில் இருந்து, செய்திகளை அனுப்பி வருகிறோம் என அவர் கூறியுள்ளார். ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் கொடுத்து வரும் பதிலடியில் நாங்கள் இணையவில்லை என அமெரிக்கா கூறியபோதும், அந்நாட்டுக்கு ஆதரவாக மறைமுக உதவியில் ஈடுபட்டு வருவது இதில் இருந்து தெரிகிறது.