ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இணைந்து கூட்டறிக்கை!
|ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அரியதொரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கூட்டறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று வெளியிட்டுள்ள இந்த கூட்டறிக்கை அரியதொரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மூன்று நாட்டு தலைவர்களும் தங்கள் நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை மாற்றியமைக்கும் தலைவராக முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு புகழஞ்சலி சூட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களான நாங்கள், முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் சோகமான படுகொலையால் அதிர்ச்சியடைந்துள்ளோம்.
பிரதம மந்திரி அபே ஜப்பானை மாற்றியமைக்கும் தலைவராகவும், ஜப்பானுக்கும் எங்களது ஒவ்வொரு நாடுகளுடனும் ஜப்பானின் உறவுகளை மாற்றியமைக்கும் தலைவராக இருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, 2007ல் ஆஸ்திரேலியா, இந்தியா , அமெரிக்கா உடன் ஜப்பானையும் சேர்த்து 'குவாட்' அமைப்பு தோன்ற ஷின்சோ அபே நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.