பாகிஸ்தானில் மர்ம கும்பல் மீண்டும் அட்டூழியம்; 2 சுங்க அதிகாரிகள் படுகொலை
|பாகிஸ்தானில் 3 நாட்களுக்கு முன் மர்ம கும்பல் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 சுங்க அதிகாரிகள், 5 வயது சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
கராச்சி,
பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை ஒருபுறம் மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரதமர் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு அமைந்ததும் பணவீக்க கட்டுப்பாட்டு நடவடிக்கை உள்ளிட்ட பல விசயங்களில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
எனினும், பொதுமக்கள் பல இடங்களில் தாக்கப்படுவதும், வழிப்பறி, கொள்ளைக்கு உள்ளாவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், அரசு அதிகாரிகளும் தப்பவில்லை. இந்நிலையில், கைபர் பக்துன்குவா மாவட்டத்தில் கடந்த வியாழ கிழமை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் தராபன் தாலுகாவுக்கு உட்பட்ட சக்கு சாலையில் சுங்க அதிகாரிகளை இலக்காக கொண்டு திடீரென தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுங்க அதிகாரிகள் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, புதர்களில் மறைந்திருந்த கும்பல் ஒன்று, திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது மோதி விட்டார். இந்த சம்பவத்தில், நபர் ஒருவர் பலியானார்.
அந்த கும்பல் தாக்கியதில், வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த சுங்க அதிகாரிகளில் 5 பேர் பலியானார்கள். இதுதவிர, தாக்குதலில், 5 வயது சிறுமியும் உயிரிழந்து விட்டார். மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் அவர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்குள் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதே மாவட்டத்தின் தேரா இஸ்மாயில் கான் பகுதியில் திடீரென ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில், 2 சுங்க அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர். இந்த தாக்குதலில், 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.