< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்..!! - தலீபான்கள் அதிரடி

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்..!! - தலீபான்கள் அதிரடி

தினத்தந்தி
|
27 Aug 2022 4:25 AM IST

ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தலீபான் அரசின் தகவல் தொடர்பு மந்திரி தெரிவித்துள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல் அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த நிலையில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் 2¼ கோடி இணையதளங்களை முடக்கியுள்ளதாக தலீபான் அரசின் தகவல் தொடர்பு மந்திரி நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இதுவரை 2 கோடியே 34 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஒன்றை தடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு பெயரில் இணையதளத்தை தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விஷயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது" என்றார்.

மேலும் இது போன்ற இணையதளங்களை ஒடுக்க, தலீபான் அரசுடன் ஒத்துழைக்க பேஸ்புக் தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்