ஐ.நா. சபையில் சர்வதேச அகிம்சை தினம்: மகாத்மா காந்தி 'ஹோலோகிராம்' வடிவத்தில் சிறப்பு தோற்றம்
|ஐ.நா. சபையில் மகாத்மா காந்தி பிறந்த நாள், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் ‘ஹோலோகிராம்’ வடிவ சிறப்பு தோற்றம் இடம் பெற்றது.
நியூயார்க்,
மகாத்மா பிறந்த நாள்
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக நாளை (அக்டோபர் 2-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
இந்த நாள், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின்போது ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ், யுனெஸ்கோ அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் சார்பில் ஒரு குழு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மகாத்மா சிறப்பு தோற்றம்
அப்போது ஒரு சிறப்பு நிகழ்வாக, மகாத்மா காந்தி 'ஹோலோகிராம்' வடிவத்தில் (முப்பரிமாண படிமம்) தோன்றி பேசும் சிறப்பு நிகழ்வு காட்டப்பட்டது.
இந்த பேச்சில் கல்வி பற்றி மகாத்மா காந்தியின் சிந்தனை குரல் வழியாய் வெளிப்பட்டது.
மகாத்மா காந்தியின் அந்த வார்த்தைகள் வருமாறு:-
கல்வி என்பது எழுத்தறிவின் முடிவும் அல்ல, தொடக்கமும் அல்ல. கல்வியின் மூலமாக குழந்தைகள் மற்றும் மனிதர்கள் வரையில் அவர்களின் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றில் உள்ள சிறந்தவற்றை வெளியே எடுப்பதை நான் குறிப்பிடுகிறேன். ஆன்மிக பயிற்சி என்றால் அது இதயத்தின் கல்வி என்று நான் சொல்கிறேன்.
கல்வியின் மதிப்பை நாம் நிலத்தின் மதிப்பை மதிப்பிடுவதுபோல, பங்குச்சந்தையில் பங்கின் விலையை மதிப்பிடுவது போல மதிப்பிடுகிறோம். அத்தகைய சம்பாதிக்கும் கல்வியைத்தான் நாம் மாணவர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
படித்தவர்களின் நடத்தையை மேம்படுத்துவது பற்றி நாம் சிறிதும் சிந்திப்பது இல்லை. பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் உண்மையிலேயே அரசுக்கான குமாஸ்தாக்களை உருவாக்கித்தருகிற தொழிற்சாலைகள் போல இருக்கின்றன. மாறாக, உண்மையான கல்வி என்பது உங்களுக்குள் இருக்கிற சிறப்பானவற்றை வெளியே கொண்டு வருவதில்தான் இருக்கிறது.
இவ்வாறு மகாத்மா காந்தியின் சிந்தனை வெளிப்பட்டது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு
இந்த குழு விவாதத்துக்கு முன்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் செய்தி வாசிக்கப்பட்டது.
அவர் தனது செய்தியில், "மகாத்மா காந்தியின் வாழ்க்கையும், முன் மாதிரியும் மிகவும் அமைதியான, சகிப்புத்தன்மை உள்ள ஒரு உலகத்துக்கான காலமற்ற பாதையை வெளிப்படுத்துகின்றன. இந்த பாதையில் சர்வதேச சமூகம், ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன், ஒரு குடும்பமாக வாழ வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.