< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவச் சட்டம் உள்ளது- இம்ரான் கான் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

உலக செய்திகள்

பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவச் சட்டம் உள்ளது- இம்ரான் கான் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
25 May 2023 11:15 PM IST

பல மாகாணங்களில் 245வது சட்டப்பிரிவை அமல்படுத்திய ஷெபாஸ் ஷெரீப்பின் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரிம் கோர்ட்டில் இம்ரான் கான் வழக்கு தொடர்ந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

லாகூர் படைப்பிரிவு கமாண்டர் அலுவலகம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை(பி.டி.ஐ.) தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிராக இம்ரான் கான் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பஞ்சாப், கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசியலமைப்புச் சட்டம் 245ஐ பயன்படுத்திய ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான் கான் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், நாட்டின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் போன்ற நிலைமை இருப்பதாகவும், தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசியலமைப்பின் 245வது பிரிவின் கீழ், நாட்டைப் பாதுகாக்க சிவில் நிர்வாகத்திற்கு உதவ ராணுவத்தை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்