< Back
உலக செய்திகள்
பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன்
உலக செய்திகள்

பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன்

தினத்தந்தி
|
26 Aug 2022 4:59 AM IST

பயங்கரவாத வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 69), தற்போதைய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இம்ரான்கான், அந்த நாட்டின் நீதித்துறைக்கும், போலீசுக்கும் மிரட்டல் விடுக்கிற வகையில் பேசினார். இதனால் அவர் மீது மறுநாளில் பயங்கரவாத தடுப்பு சட்டம் பிரிவு 7-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார்.

இந்த வழக்கில் அவர் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் பெற ஏதுவாக 3 நாள் ஜாமீனை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு வழங்கியது. இந்த வழக்கில் இம்ரான்கான் ஜாமீன் கேட்டு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹசன் நேற்று விசாரித்தார். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணை முடிவில் அவருக்கு செப்டம்பர் 1-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹசன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்