மக்கள் ஆணையை திருடிய தேர்தல் அதிகாரிகள் மீது தேசத்துரோக நடவடிக்கை: இம்ரான் கான் வலியுறுத்தல்
|நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாக இம்ரான் கான் குறிப்பிட்டார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) சின்னமான பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர்.
சின்னம் இல்லாத நிலையிலும், சுயேட்சையாக போட்டியிட்ட பி.டி.ஐ. கட்சி வேட்பாளர்கள் 90 இடங்களில் வெற்றி பெற்றனர். தேசிய சபையில் அதிக இடங்களை பிடித்தபோதும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை விட குறைந்த தொகுதிகளை வென்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன.
மக்கள் தங்களுக்கு அளித்த வெற்றியை திருடி புதிய அரசு அமைக்கப்பட்டிருப்பதாக பி.டி.ஐ. கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கின் விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"முதலில் எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னத்தை சதி செய்து முடக்கிவிட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டது. மக்களின் ஆணை திருடப்பட்டிருப்பது, அரசியலமைப்பின் 6வது பிரிவின்படி தேசத்துரோகத்திற்கு சமமானது' என்றார்.
நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகவும், மீதமுள்ள 17 அரசியல் கட்சிகள் கூட்டாக சேர்ந்து அதே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.
தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த பெஷாவர் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். பி.டி.ஐ. கட்சியின் இடங்களை மற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.