உடனே ராஜினாமா செய்.. இல்லாவிட்டால்..? அமெரிக்காவில் சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்
|அமெரிக்காவின் ஹோபோகன் நகரில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மேயருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிரான இன பாகுபாடு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், ஹோபோகன் நகரின் மேயராக இருப்பவர் ரவீந்தர் எஸ்.பல்லா. சீக்கிய மதத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அடுத்தடுத்து மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவதாக அந்த கடிதத்தில் மிரட்டி உள்ளனர்.
இதுபற்றி ரவீந்தர் எஸ்.பல்லா கூறியதாவது:-
ஆரம்பத்தில் மெயில் மூலம் வந்த கடிதத்தில் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர், வந்த கடிதத்தில் நான் சீக்கிய மதத்தை பின்பற்றுவதால் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டப்பட்டிருந்தது.
மூன்றாவதாக வந்த மிரட்டல் கடிதம் என்னை நடுங்க வைத்தது. அதில், 'இது உனக்கு கடைசி எச்சரிக்கை. உடனடியாக பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் உன்னையும், உன் மனைவி மற்றும் குழந்தைகளையும் கொன்றுவிடுவோம்' என மிரட்டியிருந்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரவீந்தர் எஸ்.பல்லா கடந்த 2017ம் ஆண்டு ஹோபோகன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ல் மீண்டும் வெற்றி பெற்று மேயர் ஆனார்.