தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
|இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 500ஐ கடந்தது
ஜெருசலேம்,
Live Updates
- 27 Oct 2023 7:35 PM IST
இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், குடியிருப்பு பகுதிகள் மீது ஹமாஸ் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மீது ராக்கெட் குண்டு விழுந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 27 Oct 2023 7:10 PM IST
மத்திய கிழக்குப்பகுதியில் 900 வீரர்கள் நிலைநிறுத்தபட்டுள்ளனர் என்று பெண்டகன் தெரிவித்துள்ளது.
- 27 Oct 2023 4:27 PM IST
சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேல் உட்பட எந்த நாட்டுக்கும் இல்லை. இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடையும் நிலையில், நான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் என லண்டன் மேயர் சாதிக் கான் வீடியோவில் கூறியுள்ளார்.
- 27 Oct 2023 2:49 PM IST
காசா முற்றுகையால் மேலும் பலர் உயிரிழப்பார்கள்: ஐ.நா கவலை
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் முழு தாக்குதல் விளைவாக இன்னும் பலர் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் அடிப்படை சேவைகள் முடங்கி வருகின்றன. மருந்து தீர்ந்து வருகிறது, உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்து வருகிறது, காசாவின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
- 27 Oct 2023 12:39 PM IST
போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதவரை பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 21வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த நிர்வாகிகள் ரஷியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் என்று ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. ரஷிய செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஹமாஸ் ஆயுதக்குழு நிர்வாகி அபு ஹமித், போர் நிறுத்த ஒப்பந்தம் எற்படாதவரை பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படப்போவதில்லை. காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பிணைக்கைதிகளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.
- 27 Oct 2023 10:40 AM IST
வடக்கு காசா எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல்
வடக்கு காசா எல்லைக்குள் நேற்று இரவு நுழைந்த இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா முனையின் பெட் ஹனொன் மற்றும் அல்புரிஜி அகதிகள் முகாமில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
- 27 Oct 2023 8:39 AM IST
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.
- 27 Oct 2023 8:21 AM IST
21வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 21வது நாளாக நீடித்து வருகிறது.
- 27 Oct 2023 5:04 AM IST
இந்திய பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் - ஜோ பைடன் குற்றச்சாட்டு
டெல்லியில் கடந்த மாதம் ‘ஜி20’ மாநாடு நடைபெற்றது. இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார்.
சீனாவின் திட்டத்துக்கு மாற்றாக...
‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வழித்தடம் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே கடல், ரெயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படவுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்கு மாற்றாக கருதப்படும் இந்த புதிய வழித்தடத்தின் மூலம் சரக்கு பரிவர்த்தனைக்கான புதிய வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் 20 நாட்களாக போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் தாக்குதலுக்கு காரணம்
இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தட திட்டத்தை தடுக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஹமாஸ் தாக்குதலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், என்னுடைய உள்ளுணர்வு இந்த தகவலை என்னிடம் சொல்கிறது” என்றார்.
- 27 Oct 2023 4:13 AM IST
தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை - இஸ்ரேல் ராணுவம்
தரைவழியாக சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் பலர் கொன்று குவிக்கப்பட்டதாகவும், அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
எனினும் முழுமையான தரைவழி தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை என்றும், இந்த நடவடிக்கையை தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, “காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாசின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என்றார்.