< Back
உலக செய்திகள்
நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
உலக செய்திகள்

நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

தினத்தந்தி
|
3 Dec 2022 2:26 AM IST

கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் ராணி கமிலாவின் ஏற்பாட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இளவரசர் வில்லியமின் ஞானத்தாயும், மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளருமான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளை கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை தொடர்ந்து, அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் லண்டனில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்கிடம் இந்த இனவெறி பிரச்சினை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் அதற்கு பதிலளிக்கையில், "அரச அரண்மனை தொடர்பான விஷயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்" என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், "கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு சிறந்த எதிர் காலத்துக்கு செல்வது சரியானது" எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்