அமெரிக்காவை தாக்கிய ஐயான் சூறாவளி - செய்தி சேகரித்த நிருபரை தாக்கிய வீடியோ வெளியீடு
|அமெரிக்காவை புரட்டி போட்ட ஐயான் சூறாவளியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபரை புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.
புளோரிடா,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
சூறாவளி கரையை கடந்தபோது 4-ம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து 1-ம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது.
ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரெல் பகுதிக்கு இடையே சூறாவளி மையம் கொண்டுள்ளது. இன்று காலை மத்திய புளோரிடாவையும் பின்னர் மேற்கு அட்லாண்டிக் பகுதியையும் புயல் கடந்து செல்லும் என தேசிய சூறாவளி மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஆரஞ்சு, பிரேவார்டு, செமினோல் மற்றும் வொலூசியா பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
எனினும், புயல் தொடர்புடைய தீவிர காயங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
போர்ட் மையர்ஸ் பகுதியில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கார்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. சில இடங்களில் மரங்கள் பலத்த காற்றில் பெயர்ந்து விழுந்தன.
25 லட்சம் பேர் கடலோர புளோரிடா பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர். பலர் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டாயப்படுத்தியும் பலரை அழைத்து செல்ல வேண்டி இருந்தது.
அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் மிக கடுமையாக தாக்கிய தீவிர சூறாவளியாக ஐயான் காணப்படுகிறது. எனினும் இரவுக்கு பின்னர், அதன் வேகம் குறைந்து காணப்பட்டது.
இந்த ஐயான் சூறாவளியானது, கியூபாவையும் தாக்கியது. இதில், அந்நாட்டில் பலத்த காற்று வீசியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். தீவின் மேற்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்தியது. கியூபாவின் பினார் டெல் ரியோ மேற்கு மாகாணத்தில் புயலுக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்பின்பு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்த சூறாவளி காற்று பற்றி செய்தி வாசிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் இந்த சூறாவளி காற்றில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சாலை நடுவே செய்தி வாசிக்க சென்றபோது, காற்றின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஆனால் சூறாவளி காற்று அவரை தள்ளுவதோடு எங்கிருந்தோ வந்த மரத்தின் கிளை அவர் மீது விழுகிறது.
இதனால் கிழே விழுந்த அவர் மீண்டும் சுதாரித்து எழுந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.