ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு
|ரஷிய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
புதாபெஸ்ட்,
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு, எரிவாயு உள்ளிட்டவற்றை சார்ந்து இருந்த ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் எரிவாயு தேவைக்காக ரஷியாவை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இயற்கை எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வழிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீவிரமாக அராய்ந்து வருகின்றன.
இதுவரை ரஷியா மீது ஐரோப்பிய ஒன்றியம் 7 சுற்று பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதையடுத்து ரஷியா மீது 8-வது தொகுப்பு தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ரஷியாவின் பொருளாதாரத்தை மேலும் நசுக்கவும், ரஷிய எண்ணெய் விலையை சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
இது தவிர ரஷிய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒருமனதாக அங்கீகரிக்க வேண்டும்.
இந்த நிலையில் ரஷிய எரிசக்தி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடைகள் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். இது எரிசக்தி விலையை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் உலக பொருளாதாரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் கூறியுள்ளார்.