< Back
உலக செய்திகள்
ஹங்கேரி ஒரு முழுமையான ஜனநாயக நாடு அல்ல: ஐரோப்பிய  நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
உலக செய்திகள்

ஹங்கேரி ஒரு முழுமையான ஜனநாயக நாடு அல்ல: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தினத்தந்தி
|
16 Sept 2022 2:22 PM IST

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக விதிமுறைகளை ஹங்கேரி மீறி வருவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிரஸ்ஸல்ஸ்,

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக விதிமுறைகளை ஹங்கேரி மீறி வருவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஹங்கேரி "இனி ஒரு முழு ஜனநாயக நாடு அல்ல" என்றும் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஹங்கேரியில் "தேர்தல் எதேச்சதிகாரத்தின் கலப்பின ஆட்சி" நடைபெறுகிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி அரசாங்கத்தின் திட்டமிட்ட மற்றும் முறையான முயற்சிகள்" மூலம் 2018 ஆம் ஆண்டு முதல் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளில் ஹங்கேரி பின்தங்கியிருப்பதாகக் கூறும் நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டது.

ஹங்கேரியில் நீதித்துறையின் சுதந்திரம், ஊழல், கருத்து சுதந்திரம் மற்றும் கல்விசார் சுதந்திரம் ஆகியவை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஜனநாயக நெறிமுறைகளை கடுமையாக மீறியதற்காக ஹங்கேரி குற்றவாளி என ஐரோப்பிய நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டது. இதனுடன் அங்குள்ள அரசையும் விமர்சித்துள்ளனர்.

ஹங்கேரியில் ஜனநாயக மீறல் நடைபெற ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலற்ற தன்மையும் இந்த நிலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அங்கு நிலைமை சரியாகும் வரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா நிதியை ஹங்கேரிக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹங்கேரிக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.தீர்மானத்துக்கு ஆதரவாக 433 வாக்குகளும் எதிராக 123 வாக்குகளும் கிடைத்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏதேனும் ஒரு பிரச்சினையில் ஒரு முடிவை செயல்படுத்த அனைத்து 27 உறுப்பு நாடுகளின் ஒப்புதல் தேவை, இதில் ஹங்கேரியின் வாக்கும் அடங்கும்.

இருப்பினும், தற்போதைய ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.மற்ற ஐரோப்பிய நாடுகளால் ஹங்கேரியின் உள்நாட்டு விவகாரம் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதற்கு இதுவே காரணம்.

ஹங்கேரியின் வெளியுறவு மந்திரி பீட்டர் சிசார்டோ செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஹங்கேரியின் ஜனநாயகத்தின் திறனை யாராவது கேள்வி எழுப்பினால், அது ஒவ்வொரு ஹங்கேரியரையும் அவமதிப்பதாக நான் கருதுகிறேன்' என்று அவர் கூறினார்.

இத்தீர்மானம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா நிதி ஹங்கேரிக்கு கிடைப்பது சிக்கலாகும்.

மேலும் செய்திகள்