6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி... அதிர்ச்சி தகவல்
|பிரான்சின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 20 பேர் கொடூர முறையில் படுகொலையான விவரங்கள் தெரிய வந்துள்ளன.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் தெற்கே ஏவிக்னான் அருகே செயின்ட் பால் டிராயிஸ் சேடக்ஸ் என்ற இடத்தில் உள்ள கல்லறையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த ஆய்வில், கற்காலத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இது ஐரோப்பிய பகுதியில் பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பெண்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு உள்ளனர்.
இதனை ஒரு சடங்காகவே செய்துள்ளனர். பிரான்சின் ரோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில், பெண்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில் இருந்து இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதில், 2 பெண் எலும்புக்கூடுகளானது, கொடூர முறையில் இருந்துள்ளன. இதன்படி, முதுகுபகுதி வழியே அவர்களின் கால்கள், கழுத்து பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தன. இதனால், அவர்களாகவே, கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழக்க செய்யப்பட்டு உள்ளனர்.
இன்கேப்ரெட்டாமென்டோ என அழைக்கப்படும் இந்த நடைமுறையின்படி, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 4 ஆயிரம் முதல் 3,500 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சடங்கின்படி பெண்களுக்கு கொடூரங்கள் இழைக்கப்பட்டு உள்ளன. இந்த கலாசாரம், மத்திய ஐரோப்பிய பகுதியிலும் பரவியிருக்க கூடும் என தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று மனித உயிர்ப்பலிகள் தொடர்புடைய படுகொலைகள் 20 முறை நடந்துள்ள விவரங்களுக்கான சான்றுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதற்காக ஐரோப்பா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.
பிரான்சின் தவுலோஸ் பகுதியிலுள்ள பால் சபேசியர் பல்கலைக்கழகத்தின் உயிரியியல் நிபுணரான எரிக் கிரப்ஸை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த 20 படுகொலைகள் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.
இதேபோன்று, மத்திய கற்காலத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்களை ஆய்வு செய்ததில், சிசிலி நகரில் உள்ள அடாவுரா குகையில், கிறிஸ்து பிறப்பதற்கு முன், 14 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில், இதேபோன்ற இன்கேப்ரெட்டாமென்டோ முறையில் 2 மனிதர்கள் இருப்பது போன்ற வடிவங்கள் தென்பட்டுள்ளன.
இதனால், உலகின் உயரிய நாகரீக முறைகளை கொண்டது என கூறப்படும் இங்கிலாந்து போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பகுதிகளில் கற்காலத்தில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளை போன்று கொடூர கொலைகள் செய்யப்பட்ட விசயங்களும் தொல்லியல் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளன.